ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருநெல்வேலி நீர், நிலம், மனிதர்களிடையே நாறும்பூநாதன் பெயர் என்றும் ஒலிக்கும்!
திருநெல்வேலியின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கியவரும், தமிழக அரசின் உ.வே.ச விருதைப் பெற்றவருமான பெருமைக்குரிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் உடல்நலக் குறைவால் (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பல அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் நாறும்பூநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையைப் பூர்விகமாகக் கொண்டவரான இரா.நாறும்பூநாதன், இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவர் எழுதிய சிறுகதைகள் ‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்திவன்’, ‘இலை உதிர்வதைப்போல’, ‘மரத்துப்போன சொற்கள்’ என்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. ‘கண் முன்னே விரியும் கடல்’, ‘கடன் எத்தனை வகைப்படும்’, ‘யானைச் சொப்பனம்’, ‘ஒரு பாடல் ஒரு கதை’, ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’, ‘வேணுவன மனிதர்கள்’, ‘பால்வண்ணம்’, ‘ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக்குறிப்புகள்’, ‘மகாகவி பாரதி’ உள்பட பல முக்கியக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலியின் பெருமைகளை விவரிக்கும் வகையில் இவர் எழுதிய ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’ என்ற நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வருபவர்கள், தங்களுடைய விருந்தினர்களுக்கு இந்த நூலையே பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டுவந்த நாறும்பூநாதன், திருநெல்வேலி புத்தகத் திருவிழாவிலும், பொருநை இலக்கியத் திருவிழாவிலும் முக்கியப் பங்கு வகித்தவர். இவரது ‘யானைச் சொப்பணம்’, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிக் காலத்தில் தன் நெருங்கிய நண்பர்களான உதயசங்கர், சாரதி ஆகியோருடன் சேர்ந்து , ’மொட்டுகள்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய நாறும்பூநாதன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை அதில் வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன் ஆகியோரை தனது இலக்கிய முன்னோடிகளாக் குறிப்பிடுவார் நாறும்பூநாதன்.
கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணன் தொடங்கி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்துவந்த நாறும்பூநாதன், சிறந்த சமூகச்செயற்பாட்டாளராகவும் விளங்கினார். இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ், ஒரு கணியான் கூத்து கலைஞர். மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த அவர், பாளையங்கோட்டை சந்தையில் வெள்ளரிக்காய் விற்று பிழைப்பை நடத்தியவர். குடும்பத்துடன் குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த அவரை, மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச்சென்று அரசின் சார்பில் அவருக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டுமென்று முன்முயற்சி எடுத்தார். அதன் விளைவாக, அந்த நெல்லை தங்கராஜுவுக்கு புதிய வீடு ஒன்றை தமிழக அரசு கட்டிக்கொடுத்தது.

கடந்த ஆண்டு, நாங்குநேரியில் 12-ம் வகுப்பு மாணவர் சின்னதுரை, சக மாணவர்களால் சாதிய வன்மத்துடன் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சின்னதுரை தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரை உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்களில் நாறும்பூநாதன் முக்கியமானவர். சின்னத்துரை தேர்வு எழுதிய காலத்திலும் அவருக்கு உறுதுணையாக இருந்ததுடன், 12-ம் வகுப்பத் தேர்வில் சின்னத்துரை சிறந்த மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்தார். தான் விரும்பிய கல்லூரியில் சின்னதுரை சேருவதற்கும் அவர் உதவினார் நாறும்பூநாதன்.
நெல்லையில் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட கோட்டைக் கொத்தளம், மேடை போலீஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. தொன்மையான அந்த இடத்தின் சிறப்பை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச்சொல்லி, அதை மீட்டுருவாக்கம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் நாறும்பூநாதன். அந்த இடம் தமிழக அரசால் ரூ.3 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, பழைய கோட்டையின் புதுப்பொலிவோடு காணப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் மீது 1840-ம் ஆண்டு கட்டப்பட்டது சுலோச்சனா முதலியார் பாலம். அந்தப் பாலம் இப்போதும் உறுதியோடு இருக்கிறது. சுலோச்சனா முதலியார் என்ற தனி மனிதர் தனது சொந்த செலவில் அந்தப் பாலத்தை கட்டியிருக்கிறார். காலப்போக்கில், சுலோச்சனா முதலியாரின் வாரிசுகள் அடையாளம் காணப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், அவரது பத்தாவது தலைமுறையினர் சென்னைக்கு அருகே வசித்துவந்ததை அறிந்து, அவரை திருநெல்வேலிக்கு வரவழைத்து மாவட்ட ஆட்சியரிடம் அறிமுகப்படுத்தி, அவர்களை கவுரவப்படுத்தி, திருநெல்வேலி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நாறும்பூநாதன்.
2022-ம் ஆண்டிற்கான தமிழறிஞர் உ.வே.சா.விருதை தமிழ்நாடு அரசு இவருக்கு வழங்கி கவுரவப்படுத்தியது. ‘ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன்’ என்று வேதனையுடன் தன் இரங்கல் குறிப்பை எழுதியிருக்கிறார் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதில், ‘சில தினங்கள் முன்புதான் இருவரும் உரையாடினோம். விரைவில் வீட்டிற்கு வந்து சந்திக்கிறேன் எனக் கூறினேன். அந்தக் குரலின் அதிர்வலைகள் கூட இன்னும் என் நெஞ்சில் இருந்து அகலவில்லை. அதற்குள் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியை மனம் ஏற்க மறுக்கிறது. அருமை நண்பர் மற்றும் எழுத்தாளர் திரு. நாறும்பூநாதன் அவர்களின் இழப்பு, தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இரா.நாறும்பூநாதனின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார், அவருடைய பால்யகால நண்பரும், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளருமான கா.உதயசங்கர். “நானும் நாறும்பூநாதனும் 8-ம் வகுப்பிலிருந்தே நண்பர்கள். சிறு வயதிலேயே அவருடைய வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்து எங்களை வாசிக்கச் சொல்வார். எந்தப் பின்புலமும் இல்லாத என்னை எழுதுவதற்கு ஊக்கமளித்து, என்னை எழுத்தாளராக ஆக்கியதே அவர்தான். கல்லூரியில் படித்தபோது, அவர் தொடங்கிய ‘மொட்டுகள்’ என்ற கையெழுத்து பத்திரிகையில்தான் எனது முதல் கவிதை வெளிவந்தது.
அன்று தொடங்கி இன்றுவரை புதிதாக எழுத வரும் எல்லோரும் உற்சாகப்படுத்துடன், அவர்களை வளர்த்துவிடுவதிலும் ஆர்வத்துடன் இருப்பார். அவர்களுக்கான மேடையையும் அவர் உருவாக்கிக்கொடுப்பார். இடதுசாரி அமைப்பில் தொடர்ந்து பயணித்தவர். என்னைப் போல பலரையும் த.மு.எ.க.ச அமைப்புக்குள் கொண்டுவந்தார்.

நெல்லை மாவட்ட சிறுகதைகள், நெல்லை மாவட்ட கவிதைகள், நெல்லை மாவட்ட கட்டுரைகள் என்று முதன்முறையாக தொகுத்தது அவர்தான். அரசுடன் சேர்ந்து அந்தப் பணியை அவர் செய்தார். அதைப் பார்த்துவிட்டு, தென்காசியிலும் அந்த மாவட்டத்தின் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், தென் மாவட்டங்களுக்கு ஆட்சியராக வரும் அதிகாரிகள், இலக்கிய நிகழ்வுகள் என்றாலே, நாறும்பூநாதனை அழைத்து ஆலோசனை பெறக்கூடிய அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஓடி ஓடி களத்தில் பணியாற்றுபவர் அவர்.
நிலம் நீர் மனிதர்கள் என்பது திருநெல்வேலி பற்றிய அவருடைய மிகச்சிறந்த படைப்பு. திருநெல்வேலியை அடையாளப்படுத்துகிற, அந்த ஊரின் பெருமைகளை ஆவணப்படுத்துகிற மிகச்சிறந்த நூல் அது. அதற்காகத்தான் அவருக்கு தமிழக அரசு உ.வே.ச விருதை வழங்கியது. தமிழக அரசுடன் இணைந்து பல முக்கியப் பணிகளை அவர் ஆற்றியிருக்கிறார்.

குறிப்பாக, நெல்லை புத்தகக் கண்காட்சி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக நடைபெறுவதற்கு அவர்தான் முக்கியக் காரணம். புத்தகக் கண்காட்சி அரங்குகளில் 24 மணி நேரமும் மாணவர்களை வாசிக்க வைப்பார். இரவு ஒன்பது மணிக்கு புத்தகக்கண்காட்சி முடிவடைந்த பிறகு இரவு முழுவதும் மாணவர்கள் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியொரு வித்தியாசமான நிகழ்வாக அதை மாற்றியவர் நாறும்பூநாதன்.
பொருநை இலக்கியத் திருவிழாவையும் முன்னுதாரணமான ஒரு நிகழ்வாக அவர் மாற்றினார். திருநெல்வேலியில் சுமார் 30 இலக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அத்தனை அமைப்புகளுடனும் அவர் தொடர்பில் இருப்பார். எல்லோருக்குமான வாய்ப்புகளையும் அவர் வழங்குவார். எவ்வளவு அழுத்தங்களும், பிரச்னைகளும் இருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன்தான் அவர் இருப்பார். அவரது மறைவு திருநெல்வேலிக்கும், இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு” என்றார் உதயசங்கர்.

சிறுவயதிலேயே நாறும்பூநாதனை நன்கு அறிந்தவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். அவரிடம் பேசினோம். “நாறும்பூநாதனை 1970-களிலில் இருந்தே தெரியும். அவருடைய தந்தை கோவில்பட்டியில் தமிழாசிரியராக இருந்தார். நாறும்பூநாதனும் அவருடைய இரண்டு அண்ணன்களும் வங்கியில் பணியாற்றியவர்கள். அந்தக் குடும்பமே ஓர் இலக்கியக் குடும்பம்தான்.
அவர்களின் வீட்டில் ஏராளமான நூல்கள் இருக்கும். நாங்களெல்லாம் அங்குபோய் புத்தகங்கள் வாசிப்போம். நாறும்பூநாதனின் மூத்த அண்ணன் ஆர்.எஸ்.மணி, அந்தக் காலத்திலேயே சிறுகதைகள் எழுதியவர். இரண்டாவது அண்ணன் குமரகுருபரன் ஓவியர். 1970-களில் ஓவியங்கள் வரைந்து செக்கோஸ்லோவாகியாவுக்கு அனுப்புவார். அங்கு வெளியாகும் பத்திரிகைகளில் அவரது ஓவியங்கள் இடம்பெறும்.
நாறும்பூநாதன் 1970-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1980-க்குப் பிறகு அவரது சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. கோவில்பட்டி இலக்கிய வட்டம் தீவிரமாக இயங்கிய காலக்கட்டம் அது. ஏராளமான எழுத்தாளர்கள் அதில் இருந்தார்கள். நான், உதயசங்கர், சாரதி, அப்பணசாமி, கோணங்கி என்று பலர் எழுதிக்கொண்டிருந்தோம்.
எங்களுடன் நாறும்பூநாதன் இணைந்துகொண்டார். அவர், இனிமையான சுபாவம் கொண்டவர். பழைய வரலாறுகளை சுவையாகச் சொல்லக்கூடிய திறமை அவருக்கு இருந்தது. அப்போதே எங்களுக்குள் குடும்ப ரீதியான நட்பும் உருவானது. தோழர்கள் வட்டத்தில் இருந்த பாலு என்ற தோழரின் தங்கையை நாறும்பூநாதன் திருமணம் செய்துகொண்டார். வங்கியில் வேலை கிடைத்த பிறகு திருநெல்வேலிக்கு அவர் இடம்பெயர்ந்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தனக்கு இருக்கும் தொடர்பை எளிய மக்களுக்காகப் பயன்படுத்துவார். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். திருநெல்வேலியில் பண்பாட்டுத்தளத்தில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக அவர் உருவாகியிருந்தார்.
நாறும்பூநாதன் தனது செயல்பாடுகளால் பலரையும் இயக்கத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார். சாதியத் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை, மாமா.. மாமா என்று நாறும்பூநாதன் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். இப்போது த.மு.எ.க.ச கூட்டங்களுக்கு சின்னத்துரை வர ஆரம்பித்திருக்கிறார்.

கடைசியாக, பாலவிநாயகம் என்ற மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் குறித்து எந்தப் பதிவும் இல்லையே என்று வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். சமீபத்தில், பலரிடம் கட்டுரைகள் பெற்று, அதைத் தொகுக்கும் வேலையில் தீவிரமாக இருந்தார். அதை அச்சுக்கு அனுப்பவிருந்த வேளையில்தான், எதிர்பாராத விதமாக மரணம் நிகழ்ந்துவிட்டது” என்று வேதனையுடன் முடித்தார் ச.தமிழ்ச்செல்வன்.
அரசியல் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எளிய மக்கள் என அனைத்துத் தரப்பினரும் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனுக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அர்த்தமுள்ள வாழ்க்கை!