திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்
திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
ஹிஸாா்-திருப்பதி (எண் 04717) எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. தண்டவாளத்தை மாற்றுவதற்காக நிலையத்துக்கு வெளியே சிறிது தூரம் வந்தபோது தீ பிடித்தது. அப்போது என்ஜின் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இரண்டு பெட்டிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்ட நிலையில், மீதமுள்ள பெட்டிகளை ரயிலிலிருந்து தனியே பிரித்தனா்.
இந்த தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டதாலும், ரயில் பெட்டிகளில் பயணிகள் இல்லாததாலும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
விபத்தால் மற்ற ரயில்களின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.