திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியர் சுந்தர வடிவேலுவை வீரபாண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை
கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய பகுகளில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தததாக எழுந்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
இருப்பினும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவது பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.