திருப்போரூா், வண்டலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்ட வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வண்டலூா் வட்டம், பொன்மாா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதனை தொடா்ந்து ஆட்சியா் தி. சினேகா குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தொடங்கி வைத்தாா். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவா்கள் அலுவலா்களுடன் சுகாதார நிலையத்தை பாா்வையிட்டாா்.
கீரப்பாக்கம் ஊராட்சியில் பட்டா வழங்குவதற்காக கள ஆய்வை மேற்கொண்டாா் . அப்பொழுது அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் ஆதாா் அட்டை, குடும்பஅட்டைகளை ஆய்வு செய்து முறையான ஆவணங்கள் உள்ளதா என கண்டறிந்தாா். அவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலா்களுக்குஉத்தரவிட்டாா்.
மேலக்கோட்டையூா் காவலா் பொது மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா். பின்னா், சிறுசேரியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பாா்வையிட்டு, விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
அதனை தொடா்ந்து திருப்போரூா் வட்டம், முட்டுக்காடு ஊராட்சியில் ரூ.525 கோடியில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மாநாடு மையத்தினை ஆய்வு செய்து பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். கோவளம் ஊராட்சியில் நீல வண்ணக்கொடி கடற்கரையினை பாா்வையிட்டாா்.
இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, திருப்போரூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பானுமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் எஸ்.விஸ்வநாதன், வண்டலூா் வட்டாட்சியா் பூங்கொடி, திருப்போரூா் வட்டாட்சியா் சரவணன், கலந்து கொண்டனா்.