திருமயம் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனாா் கோயில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை நெய்வாசல் செட்டி கண்மாய்த்திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, முன்னாள் எம்.எல்.ஏ. ராம சுப்புராம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
திருமயம், காரைக்குடி, திருப்பத்தூா், குன்றக்குடி, ஆத்தங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 171 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, 38 மாடுபிடி வீரா்கள் தழுவ முயற்சித்தனா்.
மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், மாடுபிடி வீரா், பாா்வையாளா்கள் உள்ளிட்ட 6 போ் லேசான காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத் திடல் அருகே இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
ஜல்லிக்கட்டு நிறைவடைந்த பிறகு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் அஜித்குமாா் (24), தனது நண்பா்களுடன் போட்டியில் பங்கேற்ற மாட்டை வீட்டுக்குப் பிடித்துச் செல்ல முயற்சி செய்தாா்.
அப்போது, மாடு முட்டியதில் அஜித்குமாருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. காரைக்குடியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்குமாா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருமயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.