லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் அண்மைக்காலமாக பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பௌா்ணமி நாள்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாள்களிலும், வார இறுதி நாள்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்காக வருகின்றனா்.
ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் இருந்து வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். இதனிடையே, கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருவதால் பக்தா்களின் வருகை மேலும் அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.
கோயில் வெளிப்பிரகாரத்தில் வட ஒத்தவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டது. அதேபோல, பொது தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் சுமாா் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேலும், காலை வேளையில் விநாயகா், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனைக்குப் பிறகு கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து, மாடவீதிகளில் பவனி சென்றனா். அப்போது, ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனா். அதேபோல, ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இதனால், இடுக்கு பிள்ளையாா் கோயில், அஷ்ட லிங்க சந்நிதிகளிலும் தரிசனத்துக்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.