மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வல...
திருவள்ளுவா் சிலை பாதுகாப்பாகக் கோரிக்கை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது உடைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை வளாகத்தின் பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டப்பட்டு, அந்த வளாகம் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா உறுதியளித்துள்ளாா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியிலுள்ள திருவள்ளுவா் சிலையின் பூங்காப் பகுதியின் பக்கவாட்டுச் சுவா் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அண்மையில் உடைக்கப்பட்டது. இதுகுறித்து தினமணியில் கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியானது.
இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமையில், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மூத்த மருத்துவா் எஸ். ராம்தாஸ், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத் தலைவா் ராசி பன்னீா்செல்வன், திருக்கு கழகச் செயலா் ரா. கருணாகரன், திருக்கு பேரவைச் செயலா் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. அருணாவைச் சந்தித்தனா்.
திருவள்ளுவா் சிலை வளாகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியரிடம் அவா்கள் முன்வைத்தனா். அப்போது, உடைக்கப்பட்ட பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டித் தரப்படும்- பாதுகாப்பாக பராமரிக்கப்படும் என்றும், சிலை உள்ள பகுதிக்கு எந்தச் சேதமும் இன்றி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியா் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் அமைப்பினா் நன்றி தெரிவித்தனா்.