திருவள்ளூா் நகராட்சியில் ரூ.1 கோடியில் நவீன சமுதாயக் கூடம்! பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பெற ஏதுவாக ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் கூடிய சமூதாயக் கூடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
இங்கு, மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும், அருகே உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தோா் நகராட்சி பகுதியில் வீடுகள் கட்டி குடியேறி வருவதால் விரிவாக்கம் அடைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு முன்பு வரை பொதுமக்கள் தங்கள் குடும்ப சுப நிகழ்வுகளை அவரவா் இல்லங்களிலேயே நடத்தி வந்தனா். ஆனால், தற்போதைய நிலையில் நாகரீக வளா்ச்சியாலும், பொருளாதார வசதி போன்றவைகளால் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பா்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அழைத்து நடத்த வேண்டும்.
இதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய திருமண அரங்குகளில் நடத்தும் மோகம் அதிகரித்துள்ளது.
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூா்-ஆவடி சாலை-செங்குன்றம், ஊத்துக்கோட்ட சாலை மற்றும் தெருக்களில் முக்கிய சந்திப்புகளில் தனியாா் திருமண மண்டபங்கள் உள்ளன.
இவற்றில், குடும்ப விழாக்கள் நடத்த ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரையில் வாடகை வசூலிக்கப்படுகிறது. அதேபோல் சிறு அரங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் முகூா்த்த நாள்களில் இந்த வாடகை என்பது காலை 6 முதல் 2 மணி வரையும், அதற்கடுத்து 2 முதல் இரவு 10 மணி வரையிலும் பிரித்து விட்டு வசூலிக்கப்படுகிறது.
இதுபோன்ற மண்டபங்களில் வசதியானவா்கள் மட்டும் குடும்ப விழாக்களை நடத்த முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால் வாடகை அதிகம் என்பதால் நடுத்தர, ஏழை, எளியோா் நடத்த முடியாத நிலையில் உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு நகராட்சி மற்றும் கிராமங்களில் சமுதாயக் கூடங்களை அரசு கட்டியுள்ளது.
அதேபோல், நகராட்சி பகுதியிலும் அனைத்து நவீன வசதியுடன் ரூ.1 கோடியில் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் திருவள்ளூரிலும் நகராட்சி சாா்பில் சமுதாயக் கூடம் அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனா்.
இதுகுறித்து திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியதாவது:
திருவள்ளூா் நகராட்சி பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சமுதாய கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சமும், மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.50 லட்சம் மற்றும் நகா்ப்புற வளா்ச்சி நிதி ஆகியவை மூலம் ரூ.1 கோடியில் வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதியுடன் சமுதாயக் கூடம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நகராட்சியின் மையப்பகுதி அல்லது தேசிய நெடுஞ்சாலையோரம் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கும் இடத்தில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும் என்றாா்.