திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 31 கோடியில் புதிய பேருந்து நிலைய பணி
திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 31.57 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நகராட்சி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் மூலம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் வகையில், ரூ. 31.57 கோடி மதிப்பில் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு அமைக்கப்படும் வணிக வளாகம் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டதுடன், வேலை ஆள்களை அதிகரித்து பணிகளை அடுத்து வரும் 40 நாள்களுக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினாா்.
பின்னா், வட்டாட்சியா் அலுவலகம் அருகில் திருவள்ளூா் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கான ரூ. 2.99 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, விரைவில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி பொறியாளா் ஜெயக்குமாா், உதவிப் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.