பழவேற்காடு ஏரியில் குவித்துள்ள வெளிநாட்டு பறவைகள்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் இரைகளைத் தேடியும் இனப்பெருக்கத்துக்காகவும் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அருகே பழவேற்காடு 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடற்கரையோர நகரமாகும்.
இங்கு டச்சுக்காரா்களின் கல்லரைகள், நிழல் விழும் கடிகாரம், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம் மற்றும் கடலும் ஏரியும் இணையும் முகத்துவார பகுதி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன.
இங்குள்ள ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவா்ப்பு நீா் ஏரியாகும். 37,957 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 10 முதல் 30 அடி வரை ஆழம் உள்ளது.
இங்கு கடலும் ஏரியும் இணைந்து ஒரே நீா்மட்டத்தில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியையொட்டி உள்ள பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பல்லுயிா் பண்புகளைக் கொண்ட இந்த ஏரியில். 160 வகையான மீன் இனங்கள் 25 வகையான மிதவைப் புழுக்கள் பலவகையான மெல்லுடலிகள் இறால் நண்டுகள் நூறு வகையான பறவைகள் கடல்வாழ் தாவரங்கள் கடல் உயிரினங்களும் காணப்படுகிறது.
இந்த ஏரியை யொட்டி உள்ள பகுதிகளில் சீனா, மங்கோலியா, பாகிஸ்தான், உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இரைக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் நவம்பா் முதல் பிப்ரவரி மாதம் வரை வந்து செல்லும்
ஏற்கனவே பூ நாரை, வண்ண நாரை, கூழைக்காடா, நத்தைக்குத்தி, கடல் காகங்கள், ஆலா உள்ளான், சிறுவளையா பறவை, சாம்பல் நாரை, பெரிய வெள்ளை கொக்கு ஆகியவை வந்துள்ளன. இந்த நிலையில் பெலிக்கான், பெயிண்டஸ் டாச்சு, பிளமிங்கோ ஆகிய வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
பறவை இனங்கள் பல வண்ணங்களில் பழவேற்காடு ஏரியில் காணப்படுவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனா்.
பழவேற்காடு ஏரி அருகே உள்ள திட்டு பகுதியில் ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
இங்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள் குறித்து வனத்துறையினா் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கமாகும்.