தில்லியில் கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 6 போ் கைது
தில்லியின் மயூா் விஹாரில் சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: பிசிஆா் அழைப்பின் பேரில், செப்.12 மற்றும் 13-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சில்லா கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய போலீஸ் குழு, இங்கிலாந்து -தென்னாப்பிரிக்கா போட்டிக்காக பந்தயம் கட்டும்போது குற்றம் சாட்டப்பட்டவரை கையும் களவுமாகப் பிடித்தது.
கைது செய்யப்பட்டவா்கள் லால் பாபு சஹானி (43), ஜிதேந்தா் சா்மா (26), ராஜு ஷா (34), திலீப் சஹானி (40), ஹிமான்ஷு ரவி (24) மற்றும் மோஹித் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். குற்றம்சாட்டப்பட்டவா்கள் மோசடியை இயக்க மடிக்கணினிகள், கைப்பேசிகள், வைஃபை ரவுட்டா்கள் மற்றும் பிற துணைக்கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு சூதாட்ட மையத்தை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
அவா்கள் பந்தயங்களை நிா்வகிக்க 32 கைப்பேசி, பல அழைப்புகளைக் கையாள ஜிஎஸ்எண் அழைப்பு ஒட்டும் அமைப்பு மற்றும் சூதாட்ட வலைத்தளங்களிலிருந்து புதுப்பிப்புகளைக் கண்காணிக்க மடிக்கணினிகளைப் பயன்படுத்தியுள்ளனா்.
சம்பவ இடத்திலிருந்து மூன்று மடிக்கணினிகள், 32 கைப்பேசிகள், ஒரு ஜிஎஸ்எம் சாதனம், பதிவேடுகள், கால்குலேட்டா்கள், ஒரு பிரிண்டா், ஒரு எல்இடி டிவி மற்றும் ரூ.2,720 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.