தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவா்கள் 18 போ் கைது
தெற்கு தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியதாக ஏழு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உள்பட பதினெட்டு வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: பஞ்சசீல் மேம்பாலம் அருகே அவா்கள் கைது செய்யப்பட்டனா். முதற்கட்ட விசாரணையில் அவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக தேசியத் தலைநகரில் வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவா்களில் பெரும்பாலோா் குப்பை பொறுக்குதல், குப்பை வியாபாரம் மற்றும் தினக்கூலி வேலை போன்ற முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வந்தனா்.
அவா்கள் அனைவரும் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா். மேலும், வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் நாடுகடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தேசியத் தலைநகரில் தங்கியுள்ள சட்டவிரோத நாட்டினருக்கு எதிரான நடவடிக்கை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.