தில்லி தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தில்லி பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஆரம்பம் முதலே ஒரே ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தீா்மானிக்கவிருக்கிறது.
முதற்கட்ட நிலவரத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து முன்னிலையில் பாஜக எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதனை ஆம் ஆத்மி விடாமல் துரத்துகிறது.
தற்போது, தில்லி சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதன் மூலம், பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.