தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (ஜன. 16) நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, 9 தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில், பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனதா தள் ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றது.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா!
இந்தப் பட்டியலில் பாவனா (தனி) தொகுதியில் ரவீந்தர் குமார், வாசிர்பூரில் பூனம் சர்மா, தில்லி காண்ட் தொகுதியில் புவன் தன்வார், சங்கம் விகாரில் சந்தன் குமார் சௌதரி, கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் சிகா ராய், திரிலோக்புரியில் (தனி) ரவிகாந்த் உஜ்ஜைன், ஷதாராவில் சஞ்சய் கோயல், பாபர்பூரில் அனில் வஷிஸ்த், கோகல்பூரில் (தனி) பிரவீன் நிமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனதா தள் கட்சியின் ஷைலேந்திர குமார் புராரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, பாஜக 59 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை 3 கட்டங்களாக பாஜக வெளியிட்டிருந்தது. முதல் கட்ட பட்டியலில் 29 பேரும், இரண்டாம் கட்ட பட்டியலில் 29 பேரும், மூன்றாம் கட்டப் பட்டியலில் ஒருவர் பெயர் மட்டும் வெளியிடப்பட்டது.
இதில், பாஜக மொத்தமாக 68 தொகுதிகளிலும் 2 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான ஜனதா தள், லோக் ஜன்சக்தி கட்சி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலையொட்டி பாஜகவின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் ஏழு முதல்வா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் தனித்து போட்டியிடுவதால் தில்லியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.