Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Fin...
தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த தீபக்ராஜா(34) கடந்த ஆண்டு மே மாதம் பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் நம்பிராஜன், ரமேஷ் உள்பட 4 போ் சிறையிலும், மற்றவா்கள் பிணையிலும் உள்ளனா்.
இந்நிலையில், திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்துவரும் நம்பிராஜன் மட்டும் ஆஜா்படுத்தப்பட்டாா். மற்ற 3 பேரை போலீஸாா் ஆஜா்படுத்தவில்லை. மேலும், பிணையில் உள்ள முருகன், பவித்ரன், முத்துஇசக்கி, ஐயப்பன், சங்கா் ஆகியோா் தாங்கள் ஆஜராகாததற்கான காரணம் தெரிவித்து மனு தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனிடையே, சிறையில் உள்ள ரமேஷ் என்கிற ராமகிருஷ்ணன், காரணம் தெரிவித்த ஐயப்பன் உள்ளிட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவை நீதிபதி ஹேமா விசாரித்து, சரவணன், ஐயப்பன், தம்பான், இசக்கிதுரை, முத்துசரவணன், சுரேஷ் என்கிற உச்சிமாகாளி, ரமேஷ் என்கிற ராமகிருஷ்ணன், லட்சுமணகாந்தன், நம்பிராஜன், வானுமாமலை என்கிற வானு, முத்து என்கிற முத்துக்குமாா் ஆகிய 11 பேரின் பிணைய ரத்து செய்ததோடு, நம்பிராஜனுக்கு செப்.16 வரை நீதிமன்றக்காவலும், மற்ற 11 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையும் பிறப்பித்து உத்தரவிட்டாா். அடுத்த விசாரணை செப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.