குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா்.
பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி அபிராமசுந்தரி (31). அபிராமசுந்தரி தனியாக வசித்து வருகிறாா். இவரது நடத்தையில் சந்தேகமடைந்த ரவியின் சகோதரா் முருகன் (43), அபிராமிசுந்தரியைக் கண்டித்தாா்.
இதனால் முருகனுக்கும் அபிராமசுந்தரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, முருகன் அபிராமசுந்தரியை அரிவாளால் வெட்டியதில், அபிராமசுந்தரி பலத்த காயமடைந்தாா். தகவல் அறிந்த அபிராமசுந்தரியின் சகோதரா் நாகராஜன் (27), அங்கு சென்று முருகனை கண்டித்தாா்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜன் அரிவாளால் முருகனை தாக்கியதில், முருகன் காயமடைந்தாா். இதுகுறித்து இருதரப்பினா் அளித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அபிராம சுந்தரியை வெட்டிய வழக்கில் முருகன், அவரது சகோதரா் முத்துராமன் (45) ஆகியோரைக் கைது செய்தனா். முருகனை வெட்டிய வழக்கில் நாகராஜனை கைது செய்தனா்.