சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!
நடிகர் மம்மூட்டி திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டிக்கு சிறுவயதில் இருந்தே நாடங்களில் நடித்த பயிற்சி இருந்ததால் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகும் போது அவர் சட்டக் கல்லூரி மாணவர்.
1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று வெளியான 'அனுபவங்கள் பாலிச்சகல்' (உடைந்த அனுபவங்கள்) என்கிற படமே அவருடைய முதல் படம். பின் நடித்து முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் குடும்பத்தின் நெருக்கடி காரணமாக கல்லூரிப் படிப்பை முடித்தார். பின் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய பின்பே மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
தொடர்ந்து சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு இயக்குநர் ஐ.வி. சசி நாயக பிம்பத்தைக் அளித்தார். இக்கூட்டணியில் உருவான த்ரிஷ்னா, அஹிம்சா படங்களின் மூலமே மம்மூட்டி நாயகனாக உருவெடுக்கிறார்.
அந்தக் காலகட்டங்களில் மலையாள சினிமாவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. தீவிர இலக்கியம் படைத்துக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சினிமாவை நோக்கி வந்தனர். முக்கியமாக எம்.டி.வாசுதேவ நாயர், பத்மராஜன், கே.ஜி ஜார்ஜ் போன்றவர்கள் மலையாள சினிமா மீதான அவதானிப்புகளை மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் நுட்பமான எழுத்துக்கு மிகச்சரியாக பொருந்திப்போனவர் மம்மூட்டி.

1980-ல் அவரின் மூன்றாது படம் வெளியாக 1988 ஆம் ஆண்டிற்குள் 200 திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா? மிக விரைவாக தன் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டே இருந்தாதால் மம்மூட்டி செய்யாத கதாபாத்திரங்களே இல்லை என்றானது.
ஒரு வடக்கன் வீர கதா, மதிலுகள், விதேயன், பொந்தன் மடா ஆகிய படங்கள் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றதுடன் எண்ணற்ற பல விருதுகளையும் பெற்றார்.
தயாரிப்பளாராக கடந்த 5 ஆண்டுகளில் புழு, ரோர்சாக், நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர், பிரம்மயுகம் என கதைகளுக்கு முக்கியத்துவமும் சினிமா உருவாக்கத்தின் புதிய முயற்சிகளுக்கும் மம்மூட்டி துணை நின்றுள்ளார்.
தற்போது, மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 73 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 73 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.
அடுத்ததாக, களம் காவல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லாலுடன் பேட்ரியாட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மலையாள சினிமாவுக்கான காலம் துவங்கியதிலிருந்து இன்றுவரை கடந்த 54 ஆண்டுகளாக திரைத்துறையில் நீண்ட நெடிய பயணத்தில் ஒரு ‘பழசிராஜா’வாக வலம் வரும் மம்மூட்டியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்!
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?