துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?
துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு செய்த நிலையில், தற்போது மக்களும் துருக்கி ஆப்பிள்களை விரும்பி வாங்குவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காஷ்மீர், வாஷிங்டன் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் ஆப்பிள்கள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தலத்திலுள்ள பைசாரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம், 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
இச்சம்பவத்தில் பலரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் அந்நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுலாப் பயணங்களையும் ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்தனர்.
இதனிடயே துருக்கி ஆப்பிள் வருகை குறித்து பேசிய பழ வியாபாரி ஒருவர்,
''ஆப்பிள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், துருக்கி ஆப்பிளை விற்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். துருக்கி தவிர மற்ற எந்த நாட்டிலிருந்து வரும் ஆப்பிளாக இருந்தாலும் வாங்கத் தயார் என்கின்றனர். அதனால், தற்போது காஷ்மீர், வாஷிங்டன் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் ஆப்பிள்கள் மட்டுமே உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படுகிறது'' எனக் குறிப்பிட்டார்.
துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை புறக்கணிப்பதாக உத்தரப் பிரதேச வியாபார்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தற்போது மக்களும் துருக்கி ஆப்பிள்களை விரும்புவதில்லை என்பதை வியாபாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!