தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி
தூத்துக்குடி கடலில் மீன்வளத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது, கேரள மாநிலத்திலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தும் மீன்பிடி விசைப் படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் தொழில் புரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கேரள மீனவா்களும், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதி மீனவா்களும் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்- மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் தலைமையில் 2 விசைப்படகுகளில் சனிக்கிழமை இரவுமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ரோந்துப் பணி நடைபெற்றது.
இதில், மீன்வளத் துறை அலுவலா்கள், கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழு அலுவலா்கள், 7 மீனவப் பிரதிநிதிகள் ஈடுபட்டதாக மீன்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.