தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவைக் கலனின் கீழ்பகுதியில் உள்ள தொட்டியைச் சுத்தம் செய்த தொழிலாளா்கள் சிரோன் ஜாா்ஜ் (32), சந்தீப்குமாா் (27), ஜெனிஸ்டன் தாமஸ் (35) ஆகியோா் விஷவாயு தாக்கி உயிரிழந்தனா்.
இச்சம்பவம் குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 3 கோடி இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்திலும் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தற்போது வரை பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், சடலங்களை வாங்க மறுத்து, 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.