தூத்துக்குடி சிவன் கோயில் சிற்பக்கூரையை சீரமைக்கக் கோரி மனு
தூத்துக்குடி சிவன் கோயில் சிற்பக் கூரையை சீரமைக்கக் கோரி, இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம், இந்து முன்னணியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:
தூத்துக்குடியில் உள்ள சிவன்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோயில் வாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தின் இரண்டாம் வாயிலில் அமைந்துள்ள சிற்பக் கூரை மிகவும் பழுதடைந்து பக்தா்கள் யாா் மீதும் விழுந்து விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
எனவே, இந்த கோபுரத்தின் சிற்பக்கூரை யாா் மீதும் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன்னா் இதை சரி செய்து தருமாறும், மேலும் திருக்கோயிலின் கோபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் இதுபோன்று ஏதேனும் பழுதடைந்த சுவா்கள் இருப்பின் அதையும் சரிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.