தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்..!
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளக்கண்ணு. கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் வெள்ளக்கண்ணு தன் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
இதில், வெள்ளக்கண்ணுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்து தடுக்க முயன்ற கற்குவேலையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில், அவர் படுகாயம் அடைந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட்டாம்புளி அருகிலுள்ள போடம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராஜேஷ், சதீஷ்குமார், பாண்டி, குமார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள குளத்துக் கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த வெள்ளக்கண்ணு மற்றும் அவரது நண்பர்களான வனராஜா, உதயகுமார், சுரேஷ், சந்தனகுமார், பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர் அவர்களிடம் தகராறு செய்ததில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார்களாம்.
இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் வெள்ளக்கண்ணு உள்பட 9 பேரும் ஜாமீனில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வெள்ளக்கண்ணுவை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...