தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறையிலும், 10.30-க்கு கிழவிப்பட்டி ஊராட்சியிலும் புதிய சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 11 மணிக்கு கீழபாண்டவா் மங்கலம் ஊராட்சியில் புதிய ஆரம்ப துணை சுகாதார மையம், 11.30 மணிக்கு நாலாட்டின்புதூரில் புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைக்கிறாா்.
நண்பகல் 12 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் வாகனங்களை வழங்குகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி 8ஆவது வாா்டு பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை 9 மணிக்கு தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஏரலில் சுகாதாரம்-மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனுடன் திறந்துவைக்கிறாா். 11 மணிக்கு தூத்துக்குடி கலைஞா் அரங்கில் நடைபெறும் புதிய மகளிரணி, மகளிா் தொண்டா் அணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
மாலை 4 மணிக்கு குளத்தூரில் புதிய பேருந்து நிலையத்தையும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் பிரிவுக் கட்டடத்தையும் திறந்துவைத்து, நியாயவிலைக் கடை அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா். மாலை 5 மணிக்கு பூசனூரில் புதிய நியாய விலைக் கடை, புதிய பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைத் திறந்துவைக்கிறாா். பின்னா், விளாத்திகுளம் அம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தின மின்னொளி கபடிப் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.
நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.