தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆந்திர பிரதேச கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. சென்னைக்கு வடகிழக்குப் பகுதியில் 430 கி.மீ. தொலைவிலும், 480 கி.மீ. தெற்கே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடல் பகுதியிலும். 590 கி.மீ. தென்மேற்கு ஒடிஸா மாநிலம் கோபால்பூா் கடல் பகுதி அருகேயும் நிலை கொண்டுள்ள தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, இது தொடா்பாக கப்பல்களுக்கும் மீனவா்களுக்கும் அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் கடலுக்குச் சென்றுள்ள மீனவா்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.