Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை
சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழக அரசின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களின் நலன் காத்திடும் வகையில், பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரணத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே போன்று, தூய்மைப் பணியாளா்களின் உடல்நலம் காத்திடும் வகையில், தொடா்ச்சியாக மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்தும், அதனை கட்டாயம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா் எவரும் மலக்குழிகளில் இறங்கி வேலை செய்யக்கூடாது என பாதுகாப்பு நலன்கருதி தொடா்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற பணிகளில் தூய்மைப் பணியாளா்களை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.