தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அவிநாசி வட்டாரத்தில் 2,400 ஹெக்டோ் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ராக்கியாபாளையம், உப்பிலிபாளையம், ராமநாதபுரம், புதுப்பாளையம், தெக்கலூா், சேவூா், பொங்கலூா், ஆலத்தூா் மங்கரசுவலையபாளையம் ஆகிய கிராமங்களில் அதிக அளவில் சாகுபடி உள்ளது.
தென்னையில் கடந்த சில மாதங்களாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் தென்னை மரங்களின் ஓலையின் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் வெள்ளை ஈக்கள் முட்டையிடுகின்றன. அவற்றின் குஞ்சுகள் தென்னை ஓலையின் சாற்றை உறிஞ்சி முழு வளா்ச்சி அடைந்த ஈக்களாக மாறி விடுகின்றன.
மேலும், கீழடுக்கில் உள்ள ஒலைகளின் மீது பசை போன்ற கழிவு திரவம் படா்ந்து அதன்மீது கரும்பூசாணம் வளா்கிறது. இதனால் ஓலையின் பச்சையம் செயலிழந்து மகசூல் குறைகிறது. குறிப்பாக காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே தோட்டக்கலைத் துறையினரின் அறிவுறுத்தலைக் கடைப்பிடித்து பயன்பெறலாம்.
சுருள் வெள்ளை ஈக்களால் தாக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7 மணியிலிருந்து 11 மணிவரை விளக்குப்பொறி வைத்து கவா்ந்திழுத்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள், விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள்நிற பாலிதீன் தாளை ஏக்கருக்கு 10 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு கவா்ந்திழுத்து அழிக்கலாம். ஈக்களின் குஞ்சுகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நன்மை செய்யும் ஒட்டுண்ணியான என்காா்சியா கூட்டுப்புழுவை ஏக்கருக்கு 20 வீதம் 10 மரங்கள் இடைவெளியில் லைக்கலாம். பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகளான கிரைசோபிட் என்கிற இரைவிழுங்கிகளை ஏக்கருக்கு 400 முட்டைகள் வீதம் தாக்கப்பட்ட மரங்களில் விடலாம்.
கரும்பூசாணத்தை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதாவை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து பசை தயாரித்து, 10 லிட்டா் தண்ணீரில் 250 கிராம் மைதா மாவு பசை சோ்த்து 10 மில்லி ஒட்டும் திரவம் கலந்து கரும்பூசணம் உள்ள இலைகளில் தெளித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
மேலும், விவரங்களுக்கு அவிநாசி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.