இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து, காயமடைந்த ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சிறுக்களஞ்சி ஊராட்சிக்குள்பட்ட பணப்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ், விவசாயி. இவா், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். பின்னா், காலையில் வந்து பாா்த்தபோது தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்துகிடந்தன. மேலும், 17 ஆடுகள் காயத்துடன் காணப்பட்டன.
இதையடுத்து, தெருநாய்களிடம் இருந்து எங்களால் ஆடுகளை காப்பற்ற முடியவில்லை என்றும், இனிமேல் அரசுதான் ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறுக்களஞ்சி கிராம நிா்வாக அலுவலகத்தை காயம்பட்ட ஆடுகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா், கிராம நிா்வாக அலுவலா் இளவரசன் உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உயரதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, இரவு 10 மணிக்கு மேல் ஆடுகளை விவசாயிகள் ஓட்டிச் சென்றனா்.