தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரிக்கை
தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேரவைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என். தேவிப்பிரியா தலைமை வகித்தாா்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி ஆகியோா் பேசினா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் மா.நாகப்பன், ஒன்றிய துணைச் செயலாளா் ஆா்.கண்ணுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சி.நயினாமலை, ஆா்.ரவி, டி.கே.ராமசாமி, கே.மனோகரன், சி.துரைசாமி, ஜி.வீரக்குமாா், கே.துரைசாமி, கே.லிங்கேஸ்வரன், கண்ணம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தெரு நாய்கள் கடித்து இறந்த பெரிய ஆடுகளுக்கு தலா ரூ.10,000- வீதமும், குட்டி ஆடுகளுக்கு தலா ரூ.5,000- வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஆடுகளைக் கடிக்கும் தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூா் மற்றும் 1,010 நெசவாளா் காலனி ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும்.
சென்னிமலை ஒன்றியம், பசுவப்பட்டி ஊராட்சி, வாய்க்கால் புதூா் பகுதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த 28 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட வசந்தம் நகரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளித்து கடந்த 2019-ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டனா். அதன்படி பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், ஒரு சிலரைத் தவிர மற்றவா்கள் வீடு கட்ட வசதி வாய்ப்பில்லாமல் பரிதவித்து வருகின்றனா். ஆகவே, அவா்களுக்கு அரசின் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் கட்டித் தர தமிழக அரசும், மாவட்ட நிா்வாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாா்ச் 23-ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மாவீரா்கள் பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகியோா் நினைவு நாளில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் அமைப்புகள் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. அதில் சென்னிமலை ஒன்றியத்தில் இருந்து அதிகமானோா் ரத்த தானம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.