அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
தேங்காய் சிரட்டையில் புத்தர், அம்பேத்கர்... கலைநயமிக்க பொருள்களை உருவாக்கி அசத்தும் இளைஞர்!
படைப்பாற்றல் என்ற சொல் புதிய யோசனை, கலை, கண்டுபிடிப்பு என பலவற்றை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். அந்த ஆற்றல்தான் நம்மை வித்தியாசப்படுத்தி, முன்னோக்கி நகர்த்திச் செல்லும். அப்படி ஒரு வியப்பான படைப்பாற்றல் கொண்டவர்தான் சுதேசி கமல். புதுபுதுப் பொருகளை வாங்கிக் குவிக்கும் இந்த காலத்தில் இது தேவையில்லை என்று தூக்கிப் போடும் பொருளை, கலைப்பொருளாக மாற்றும் இவரின் எண்ணம் வியக்க வைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதேசி கமல். பத்தாவது வரை மட்டுமே படித்துள்ள இவர், கப்பல் சார்ந்த தொழில் நிறுவனத்தில் வெல்டர் ஆக பணிபுரிந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுள் இவரும் ஒருவர். அப்போதுதான் இந்தக் கலை பொருள்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றுள்ளார்.
தேங்காய் சிரட்டையில் வீணை, மாடு, மயில், சேவல், பழங்கால டெலிபோன், கப்பல், யாழ், யானை, அம்பேத்கர், திருவள்ளுவர், நடராஜர், புத்தர், புல்லட், சைக்கிள், டிராக்டர், ஏர் கலப்பை, எலும்புக் கூடு என 50-க்கும் மேற்பட்ட கலைநயமிக்க பொருள்களை கடந்த 4 வருடங்களாகச் செய்து வருகிறார். பாரம்பர்யத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், தன்னுடைய வாழ்க்கையை இயற்கையோடு இயைந்து வாழத் தொடங்கியுள்ளார். மணலியில் `பழைய கடை’ என்ற பெயரில் இயற்கை உணவுகளை விற்பனை செய்திருக்கிறார். தன்னுடைய பெயரையும் சுதேசி கமல் என மாற்றியிருக்கிறார். மேலும் இயற்கை சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மாத இதழையும் 9 மாதங்கள் நண்பர்களோடு நடத்தியிருக்கிறார்.
தன்னுடைய வசிப்பிடத்தில் மாடுகள், மரங்கள், மூலிகைகள் போன்றவற்றை வளர்ப்பதற்காகவே சென்னையில் இருந்து பல கிலோ மீட்டருக்கு வெளியே சொந்தமாக வீடு கட்டி குடியேறியுள்ளார். இவரின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளுக்காக 2022 ஆம் ஆண்டின், தமிழ்நாடு அரசின் 'பசுமை முதன்மையாளர் ' விருதும், 1 லட்ச ரூபாய் பரிசு தொகையும் பெற்றுள்ளார். தன்னுடைய வீட்டிற்கு வருகிறவர்களுக்கு செம்பருத்தி தேநீர் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர், எங்களையும் அவ்வாறே வரவேற்று பேசத் தொடங்கினார்.
"கொரோனா காலத்துல வீட்டுக்குள்ள எல்லாரும் முடங்கியிருந்த சூழல்ல எனக்கு வேலையும் போச்சு, ஏதாவது செய்யனும்கிற எண்ணம் எனக்குள்ள வந்துச்சு. அதனால கொட்டங்குச்சியை வச்சு பொருட்கள் செய்ய ஆர்ம்பிச்சேன். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இயற்கை சார்ந்த அமைப்புகளோடு இணைந்து பயணிக்க ஆரம்பிச்சேன், இயற்கை உணவுகளை பத்தி பள்ளி மாணவர்கள், பொது மக்கள்கிட்ட எல்லாம் பேச ஆரம்பிச்சேன். 2022ல் 'விழி தமிழா இது உணவு யுத்தம்' என்கிற 4 பக்கம் கொண்ட மாத இதழை ஆரம்பிச்சேன், 10 நண்பர்களோட பண உதவியால 9 மாதங்கள் பத்திரிகை வெளிவந்துச்சு. அப்புறம் சில காரணங்களால் நின்னு போச்சு. 5000 பிரதிகள் மாதம் மாதம் நம் உணவு சார்ந்த விசயங்களை நானே எழுதி இலவசமாக என்னை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களிடம் கொடுத்தேன். மக்களுக்கு இந்த கருத்துகளை கொண்டு சேர்க்கணும் என்று நினைத்தேன்.
2021- 2022 வரைக்கும் மணலியில் 'பழைய கடை'னு பெயர்ல கேழ்வரகு அடை, செம்பருத்தி தேநீர், 6 வகை மூலிகைகள் தண்ணீர், சிறுதானிய பனியாரம் என பாரம்பரிய உணவுகளை விற்பனை செஞ்சேன். ஆனா, கொரோனா முடிஞ்சு எல்லா கடைகளும் திறந்ததால கடைக்கு மக்கள் வரதில்லை. அதனால கடையை வேற வழியில்லாம மூடிட்டேன். நம்மாழ்வார் ஐயாவின் வழிகாட்டுதல் எனக்கு மிகவும் ஊக்கத்தை தரும் ஒன்று, அவர் வழியில் இயற்கை விவசாயம் செய்வதுதான் என் எதிர்கால நோக்கம். அதோட தொடக்கம் தான் மாடு, மரங்கள், செடிகள் எல்லாம் என்னோட வீட்டை சுத்தி இருக்கணும்னு மணலியில இருந்து சென்னைக்கு பக்கத்துல இருக்கிற கண்ணம்பாளையம்ங்கிற கிராமத்துக்கு வந்துட்டேன், இப்ப இங்க 2 மாடு, அதோட சாணத்துல இருந்து பயோ கேஸ், அதோட கழிவை செடி, கொடிகள் மரங்களுக்கு என பயன்படுத்தி, அதுல வர கீரைகள், பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டுட்டு நான் நினைச்ச வாழ்கையை மகிழ்ச்சியா வாழ்கிறேன்.
கொரோனா காலத்துல ஒரு தாத்தா தன்னோட பேரனுக்கு கொட்டங்குச்சில பொம்மை செஞ்சு கொடுத்தத மொபைல்ல பாத்தேன், நம்ம தான் நண்பர்களுக்கு தேநீர் குவளையை செஞ்சு கொடுத்திருக்கோமே, அதனால நம்மளும் கொட்டாங் குச்சியை வச்சு ஏதாச்சும் பண்ணலாம்னு தோணுச்சு. அப்படித்தான் நான் முதன்முதலா சைக்கிள் பண்ணன், அதுக்கு ஃபேஸ்புக் மூலமா நண்பர்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சு. இன்னும் நிறைய பண்ணுங்கனு சொன்னாங்க, அதனால வீணை, யாழ், புல்லட், டிராக்டர், ஏர் கலப்பை, பழங்கால டெலிபோன், யானை, கப்பல், மயில், எலும்புக் கூடு, பாடி பில்டர் என 50-க்கும் மேற்பட்ட விதவிதமான சாவி கொத்துகள், 10 விதமான கரண்டி, மோதிரம்னு எல்லாம் செஞ்சேன். தேங்காய் ஓடை தேய்க்கும் போது வருகிற தூளை வைச்சி முக வடிவங்கள் கொடுத்து அம்பேத்கர், புத்தர் , திருவள்ளுவர் சிலையெல்லம் செய்ய ஆரம்பித்தேன்.
ஒன்றரை மாசமா நடராஜர் சிலையை மட்டுமே செஞ்சிருக்கேன், பாடி பில்டர் சிலையை 2 நாள் தொடர்ச்சியா செஞ்சேன். அடுத்து நாட்டு சுரைக்காயில் பூந்தொட்டி, குருவி கூடுகள்பனையோலையிலும் சில பொருள்கள் என இயற்கை சார்ந்த பொருள்களை செய்யவும், மத்தவங்களுக்கு கற்றுக் கொடுக்கவும் ஆரம்பிச்சேன். அதற்காக எனக்கு 2022 ஆம் ஆண்டுக்கான 'பசுமை முதன்மையாளர்' என்கிற அரசு விருதும் கொடுத்தாங்க. அதுல கிடைத்த 1 லட்ச ரூபாயை வைச்சு சில பொருள்கள் செய்ய ஆரம்பிச்சேன், ஆனா, இந்த பொருள்களை வெளியிடத்துக்கு கொண்டு போய் விற்பனை செய்யிறதுக்குள்ள சில பொருள்கள் உடைஞ்சிரும். அதனால பொருள்களை விற்பனை செய்றதுல சிரமம் இருக்கு. பல நாள்கள் எடுத்துச் செய்கிற பொருள்களை குறைவான விலைக்கே கேட்பதால், குடும்ப சூழ்நிலையால தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிட்டு தான் இதையும் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
முழுநேர வேலையா இல்லாததாலும், இயந்திரங்கள் எதுவும் இல்லாம கைகளால மட்டுமே பொருள்களை செய்வதாலும், தூசி அதிகளவுல வரதுனால அதிகமான பொருள்களையும் செய்ய முடியுறதில்லை. இப்ப கடைசியா, முதல்வருக்கு பரிசு கொடுக்கணும்னு விவசாயி ஒருத்தருக்கு டிராக்டர், ஏர் கலப்பை செஞ்சுக் கொடுத்தேன். இன்னும் 5 வருசத்துல வேலையை விட்டுட்டு, முழுமையா கலை நயமிக்க பொருள்கள் செய்றதும், இயற்கை விவசாயம் பண்றதும்தான் என்னோட அடுத்த திட்டம். நெகிழியை தவிர்த்து அதற்கு மாற்றாக நம்முடைய பாரம்பர்ய பொருள்களை வரும் தலைமுறை பயன்படுத்த வேண்டும், அதற்கான வழிகளை இந்த தலைமுறை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்” என்று நெகிழ்வுடன் தனது வேண்டுகோளையும் நம்மிடம் வைத்தார்.