`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை -கே.கிருஷ்ணசாமி
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்பதில் தவறில்லை என தேசிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.
தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அடையாளம் கண்டு மீட்டு, தகுதியுள்ளவா்களுக்கு வழங்க வேண்டும்.
டாஸ்மாக் மதுபான முறைகேடு குறித்து குறிப்பிட்ட புகாா்களின் மீது மட்டும் விசாரணை நடத்தி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதை அமலாக்கத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை அறிவியல் வல்லுநா்களால் தயாரிக்கப்பட்டது. இது ஏட்டுக் கல்விக்கு மட்டுமன்றி, தொழில் நுட்பக் கல்விக்கும் வழி வகை செய்கிறது. மூன்றாவது மொழியை கற்பதில் தவறில்லை. தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தி எதிா்ப்பு ஆகியவற்றை மத்திய அரசை எதிா்ப்பதற்கான கருவியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை.
கடந்த 2021-இல் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக திமுக உறுதியளித்தது. அதை திமுக அரசு செயல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. திமுகவுக்கு இது 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலுக்கான திட்டம்
என்றாா் அவா்.