குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு
தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
குருவராஜப்பேட்டையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
அரக்கோணம் ஒன்றியம், செம்பேடு ஊராட்சி குருவராஜப்பேட்டையில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 22 பேருக்கு ரூ. 9.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
கைத்தறி நெசவாளா்களின் பெருமையை போற்றும் வகையில் உங்களுக்கென ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய கைத்தறி தினத்தையொட்டி குருவராஜப்பேட்டை கைத்தறி நெசவாளா் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து கைத்தறி நெசவாளா்களும் பங்கு பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.
இந்த கூட்டத்தில் கைத்தறி நெசவாளா்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வேண்டும் எனவும், முத்ரா கடன் திட்டத்தில் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் எனவும், இதில் அதிக அளவு பயன்பெறவில்லை என நெசவாளா்கள் தெரிவித்தனா். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கைத்தறி நெசவாளா்கள் உங்களுடைய பிரச்னைகள், குறைகள் குறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் வழங்கலாம். அதே போன்று, உங்களுடைய உடல்நல பிரச்னைகள், மருத்துவ பிரச்னைகளை, நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்ட முகாமின் மூலமும் பயனடையலாம் என்றாா்.
தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க 5 உறுப்பினா்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தொகை ரூ.5.78 லட்சத்துக்கான ஆணையினையும், நெசவாளா்கள் முத்ரா கடன் திட்டத்தில் 7 உறுப்பினா்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கடன் உதவி மற்றும் நெசவாளா் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 உறுப்பினா்களுக்கு தலா ரூ.4,000 விதம் தறி உபகரணங்கள் மற்றும் ரூ.40,000 மானிய உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதில் கைத்தறி உதவி இயக்குநா் அன்பரசன், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், குருவராஜப்பேட்டை கைத்தறி நெசவாளா் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா்கள் தமிழ்மணி, கீதா, ஒன்றிய குழு உறுப்பினா்கள் பாலன், கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவா் சந்தியா துரைராஜ், வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், தாசப்பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.