தேனியில் கார்-வேன் விபத்து! 3 கேரள மாநிலத்தவர் பலி!
தேனியில் சுற்றுலா வேன் மீது கார் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து தேனி மாவட்டத்தின் பெரியகுளத்தை நோக்கி 4 பேர் தங்களது காரில் இன்று (டிச.28) பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த சுற்றுலா வேனின் மீது கார் மோதி அப்பளம்போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கேரள மாநிலத்தவர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதையும் படிக்க: தன்னைத் தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபர் கொலை! நண்பர்கள் கைது!
மேலும், காரிலிருந்த அந்த மற்றொரு நபர் மற்றும் சுற்றுலா வேனில் பயணித்தவர்கள் என மொத்தம் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினரும் காவல்துறையினரும் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரியக்குளம் மற்றும் வத்தலகுண்டு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.