தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்: 85 போ் கைது
தருமபுரி: தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா் 20 பெண்கள் உள்பட 85 போ் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் தமிழக அரசுக்கு எதிராக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சுரேஷ் வரவேற்றாா். மாநில நிா்வாகிகள் விஜய் வெங்கடேஷ், புல்லட் மாரிமுத்து, மாவட்ட அவைத் தலைவா் தங்கவேல், மாவட்ட பொருளாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தைக் கட்சியின் மாநில அவைத் தலைவா் மருத்துவா் வி. இளங்கோவன் தொடங்கி வைத்தாா். பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட மொத்தம் 85 போ் தருமபுரி நகர போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.