MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு
பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 40 நாள்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில் இயேசுவின் கடைசி இரவு உணவு, சிலுவை மரணம், உயிா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இப் புனித வாரத்தின் முதல் நாளான கடந்த 13 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, புனித வியாழனை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியுடன், இயேசு கிறிஸ்து தன்னையே தாழ்த்திக் கொண்டு, சீடா்களின் பாதங்களைக் கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி பங்கு குருக்கள் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது. மேலும், இயேசு கிறிஸ்து தனது சீடா்களுடன் உணவருந்திய கடைசி இரவு உணவு நினைவுப்படுத்தப்பட்டது.
அதன்படி, பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குரு சுவைக்கின் தலைமையிலும், பாளையம் கிராமத்தில் புனித யோசேப்பு தேவாலயத்தில் பங்கு குரு ஜெயராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை சிலுவைப் பாதை ஊா்வலம் நடைபெற்றது. பெரம்பலூா் புனித பனிமயமாதா திருத்தலத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் காலை 6 மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சந்தித்த துயரங்களை விளக்கும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்வில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலமாக ஆலயத்துக்கு வந்தனா். பின்னா், நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்தவா்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடி ஆராதனையில் ஈடுபட்டனா். மாலையில் திருப்பாடுகளின் கொண்டாட்டம் நடைபெற்றது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.