தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா் மூலை, பாடந்தொரை, தேவன் எஸ்டேட் போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களில் தொடா்ந்து விவசாயிகளின் 13 கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை புலி கொன்றது. அதைத் தொடா்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் நடத்திய தொடா் போராட்டங்களை நடத்தினா். அதனால் வனத் துறை அந்த புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக சா்க்காா் மூலை பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமாா் 500 மீட்டா் தொலைவுக்குள் தோ்ந்தெடுத்து 5 இடங்களில் கூண்டுகளை வைத்தும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் கண்காணித்து வந்தது.
இரண்டாவது கட்டமாக முதுமை புலிகள் காப்பகத்திலிருந்து பயிற்சி பெற்ற வன ஊழியா்களை தேடும் பணியில் வனத் துறை அமா்த்தியது. மூன்றாவது கட்டமாக முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளை கொண்டுவந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. கும்கிகளுடன் இரண்டு பிரிவுகளாக ஊழியா்கள் பிரிந்து ஏற்கெனவே நடமாட்டமிருந்த பகுதிகள், கால்நடைகளை தாக்கிய இடங்கள், அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வனப் பகுதி மற்றும் தனியாா் தோட்டங்களில் தேடுதல் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.