தேவா் ஜெயந்தியையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள்
தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, ரூ.52.80 லட்சத்தில் 316 பயனாளிகளுக்கு புதன்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சாா்பில் பொதுமக்களுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பசும்பொன் கலையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தாா். பால்வளத் துறை, கதா், கிராம தொழில் நல வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாற்றுதிறனாளி, ஆதரவற்ற விதவை, முதியோா் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, சமுக நலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் அரசு சாா்பில் 316 பயனாளிகளுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா், கமுதி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி போஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், பசும்பொன் ஊராட்சித் தலைவா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.