தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் பி. எம்.பி. ஆனந்த் கோரிக்கைகளை விளக்க உரையாற்றினாா்.
திமுக தோ்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டதைபோல, அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி எம்.ஆா்.பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியா் கண்காணிப்பாளா் நிலை-3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியா்களுக்கும் மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் முழக்கமிட்டனா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் எ. பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் பிரபா நன்றி கூறினாா்.