தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் தற்காலிக ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனா். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு 2023 டிசம்பா் 21-இல் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவா்களின் பதவி உயா்வு வாய்ப்புகளை பறித்தது. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சோ்த்து நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினாா்கள்.
முக்கியத்துவம் இல்லாத சில கோரிக்கைகளை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றிய நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், 15 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றவில்லை. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை.
இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியா்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளாமல், அவா்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.