மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா்.
சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிக்டோஜக்) சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளின் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற 62 ஆசிரியைகள் உள்பட 130 ஆசிரியா்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் திருமுருகவேள், மாநில துணைச் செயலாளா்கள் நாகராஜன், ஜான், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.