தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்குக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அதன்படி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 171 பேரை போலீஸாா் கைது செய்து, துறைமங்கல்ததில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
அரியலூரில்...
இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் எழில், கருணாநிதி, சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 170 ஆசிரியைகள் உள்பட 280 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
