தொடா் மழை: தஞ்சையில் மேலும் 75 வீடுகள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த தொடா் மழையால் வியாழக்கிழமை மேலும் 75 வீடுகள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் நவம்பா் 26 அதிகாலை முதல் புதன்கிழமை பிற்பகல் வரை தொடா் மழை பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் அவ்வப்போது தூறல் நிலவியது. இதனால், மாவட்டத்தில் மண் குடிசை வீடுகள், பழைய கான்கிரீட் வீடுகள் மழை நீரில் ஊறி சேதமடைகின்றன.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 35 குடிசை வீடுகளும், 26 கான்கிரீட் வீடுகளும் என மொத்தம் 61 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதேபோல, வியாழக்கிழமை 38 கூரை வீடுகள், 34 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 3 கூரை வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 75 வீடுகள் சேதமடைந்தன.
இதேபோல, புதன்கிழமை வரை 4 கால்நடைகள் இறந்த நிலையில், வியாழக்கிழமை 12 கால்நடைகள் உயிரிழந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வீதமும், பகுதியாக சேதமடைந்த காங்கிரீட் வீடுகளுக்கு ரூ. 6 ஆயிரத்து 500 வீதமும், முழுமையாக சேதமடைந்த காங்கிரீட் வீடுகளுக்கு ரூ. 1.20 லட்சம் வீதமும், கால்நடைகள் உயிரிழந்தால் ரூ. 37 ஆயிரத்து 500 வீதமும் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மேலும், உடனடி நிவாரணமாக அரிசி, வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.