தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி புதுபள்ளிவாசல் தெருவில் தெரு நாய்களும், கிழக்கு கடற்கரைச் சாலை, மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகளும் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தொண்டி புதுபள்ளிவாசல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மாடு முட்டித் தள்ளியதில் சிறுவன் காயமடைந்தான். இந்தச் சம்பவம் அங்குள்ள வீட்டின் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இதையடுத்து, இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், மாடுகளை பண்ணைகளில் அடைக்க தொண்டி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.