தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் குழந்தை: கல்லூரி மாணவியிடம் விசாரணை
தொப்புள் கொடியுடன் குப்பையில் உயிருடன் கிடந்த பெண் குழந்தையை போலீஸாா் மீட்டனா். மேலும், இது குறித்து கல்லூரி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை, தாம்பரத்தையடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகா் பிராதான சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளுக்கு மத்தியில், செவ்வாய்கிழமை பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கதறி அழுத நிலையில் கிடந்ததைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் சேலையூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் குப்பையில் கிடந்த அக்குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் சிசுவை வீசிச் செல்வது பதிவாகியிருந்தது.
அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே தெருவில் வசித்து கல்லூரியில் படிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மாணவி , வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தையை குப்பையில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியை பிடித்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.