தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!
கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
கோட்டயம், திருவாதுக்கல் பகுதியில் வசித்து வருபவர் விஜய குமார். இவர் திருநக்கரா பகுதியில் பிரபல திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு விஜய குமாரும் அவரது மனைவி மீராவும் வெவ்வேறு அறைகளில் சடலமாக கிடப்பதை வீட்டின் பணியாளர்கள் கண்டுள்ளனர்.
உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடூரமாக கொலை
வீட்டின் தனித்தனி அறைகளில் உடைகளின்றி இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் முகத்தை பலமாக தாக்கி, கிழித்து கொலை செய்துள்ளனர். விஜய குமார் தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.
மேலும், இருவரையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்விரோதம்?
கொலை நடந்த பகுதியை ஆய்வு செய்த கோட்டயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாகும் ஹமீது, இது கொலைதான் என்று தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்த எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படாததால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகித்துள்ளனர்.
மேலும், வீட்டை உடைத்து கொலையாளிகள் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவரை விஜய குமார் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பணிநீக்கம் செய்திருந்தார். இதன்காரணமாக அந்த நபரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமண மண்டபம் மட்டுமின்றி விஜய குமார் பல வணிக நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாகவும், கொலை நடந்த சமயத்தில் வீட்டில் இருவரும் தனியாக இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வி.என். வாசவன், இந்த கொடூரமான கொலை தொடர்பாக காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.