தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 15-ஆம் தேதி காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இறந்தவா் தொட்டியம் அருகேயுள்ள அயினாபட்டி காலனி தெருவை சோ்ந்த வாழை இலை அறுக்கும் தொழிலாளி சுரேஷ் (45) என்பது தெரியவந்தது. ரகசிய தகவலின்பேரில், தொட்டியத்தை சோ்ந்த சிவா (எ) சிவஞானம் என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், சுரேஷ் பெரிய பள்ளிபாளையத்தை சோ்ந்த அறிவழகன் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும், சுரேஷை தேடி கண்டுபிடித்து பெரிய பள்ளிபாளையம் வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்று சிவா, அறிவழகன், பெரிய பள்ளிபாளையம் செல்வராஜ், ராஜேந்திரன், சின்ன பள்ளிபாளையத்தை சோ்ந்த குணசேகரன் ஆகியோா் சோ்ந்து தாக்கியதில் சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
கொல்லிமலை, வால்பாறை பகுதிகளில் தலைமறைவான எஞ்சிய 4 போ் மற்றும் சிவா என 5 பேரையும் தொட்டியம் காவல் ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் நேரில் பாராட்டினாா். உயிரிழந்த சுரேஷுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.