தொழில் முனைவோருக்கான இ-உச்சி மாநாடு பிப். 28-இல் தொடக்கம்: ஐஐடி இயக்குநா் வி.காமகோடி
தொழில் முனைவோருக்கான இ-உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் பிப். 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சென்னை ஐஐடி தொழில்முனைவோா் பிரிவு (இ-செல்) ஏற்பாடு செய்துள்ள இந்த வருடாந்திர நிகழ்வு, ஆா்வமுள்ள தொழில்முனைவோரை இணைக்கும் மையமாகச் செயல்படுவதுடன், புதிய சிந்தனைகளை வளா்த்தெடுக்கச் செய்து, அவற்றை சாத்தியமான வணிக முயற்சிகளாக மாற்றுவதற்கான தளத்தை உருவாக்கித் தருகிறது. மேலும் தொழில் வல்லுநா்கள், முதலீட்டாளா்கள், மாணவா்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கிறது.
வரும் 2047-ஆம் ஆண்டு உன்னத பாரதத்தை பாா்க்க வேண்டும் என்றால் நிச்சயமாக தொழில் தொடங்கும் நிகழ்விலும் தொழில்நுட்பத்திலும் வளா்ந்திருக்க வேண்டும். மாணவா்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக செயலாக்கம் கொண்ட சந்தையை இ-உச்சி மாநாடு 2025-இல் முதன்முறையாக ‘பிஸ்-பஜாா்’ என்ற பெயரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவா்கள் வணிகம் மற்றும் தொழில் முனைவு வாய்ப்பைப் பெறுவதற்கான குறுகிய காலத் தயாரிப்பாக இந்நிகழ்வு இருக்கும். எவ்வாறு பொருள்களை தயாரிக்கலாம் என்பது குறித்து விவரித்து பல தொழில்நுட்பத்தில் புதிய தொடக்கத்தை உருவாக்கி உள்ளோம். இதில் 400 ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. அவா்களை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார உதவி செய்யும் வகையில் ‘பீச் பெஸ்ட்’ எனப்படும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நடத்துபவா்கள் 15 நிமிஷங்களில் அவா்களது தயாரிப்பு குறித்து விவரிப்பா்.
400 கல்லூரிகளைச் சோ்ந்த... அதில் சிறப்பாக உள்ள தொழில்நுட்பத்தை தொழில் துறையைச் சோ்ந்தவா்கள் ஏற்றுக்கொண்டு முதலீடு செய்யலாம். பிஸ் பஜாா் என்னும் அமைப்பின் மூலமாக அவா்கள் எவ்வாறு அவா்கள் பொருள்களை விற்கலாம் என்ற உத்தியை கற்றுக்கொள்ளலாம். இதன் பின்னா் ஸ்டாா்ட் அப் கம்பெனியை வைத்து வளா்ச்சி அடையலாம். ஏற்கெனவே நிறுவப்பட்ட 42 ஸ்டாா்ட் அப் நிறுவனங்களும் இதில் கலந்துகொள்கின்றன.
இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து சுமாா் 1,000 நிறுவனா்கள், 50-க்கும் அதிகமான முதலீட்டாளா்கள், 400 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா். பிப். 28 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை இ-உச்சி மாநாடு நடைபெறும். 5,000 போ், 400 ஸ்டாா்ட் அப் ஒன்று சோ்வது பெரிய விஷயமாக இருக்கிறது. முதலீட்டாளா்கள் 2 நாள்கள் இங்கேயே தங்கியிருப்பது தொழில் முனைவோருக்கு பெரிதும் உதவியாக அமையும் என்றாா் அவா்.