அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
தோகைமலை: குள்ளாயி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
தோகைமலை அருகே கொசூா் குள்ளாயி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கொசூரில் உள்ள விநாயகா், குள்ளாயி அம்மன், பாம்பலம்மன் கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா ஏப். 27-ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து கோயில் முன் கம்பம் நட்டு பூசாரிகளுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை கோயில் கிணற்றில் குள்ளாயி அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், தொடா்ந்து அம்மன் கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து கோயிலில் குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு பால், நெய், பன்னீா், பஞ்சாமிா்தம், தேன், பழங்கள், திருநீரு, திருமஞ்சனம், குங்குமம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து குள்ளாயிஅம்மனுக்கு ரூ.500, 200, 100, 50, 20, 10 என மொத்தம் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா் பொங்கல் வைத்தல், குதிரையில் அம்மனை மந்தாநாயக்கரை கோயிலுக்கு அழைத்து வருதல், மாவிளக்கு எடுத்தல், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் குள்ளாயி அம்மன் திருக்கரகம் வீதி உலா வந்து கோயில் கிணற்றில் விடப்பட்டது. விழாவில் கொசூா் கிராம விழா கமிட்டியாளா்கள், முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டார பகுதியிலிருந்து பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.