முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது
கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (71). இவா் கரூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 25-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, திடீரென கத்தியுடன் முகமூடி அணிந்தநிலையில் வீட்டுக்குள் நுழைந்த 3 மா்ம நபா்கள், வீட்டில் பீரோவில் இருந்த பணம் ரூ. 6 லட்சம் மற்றும் ஆறரை சவரன் நகைகள், 50 கிராம் தங்கக் காசுகள், இரு தங்க கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனா். அப்போது கொள்ளையை தடுத்த வழக்குரைஞா் ஆறுமுகத்தை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் கொள்ளையா்களை பிடிக்க தனிப்படை அமைத்தனா்.
இந்த தனிப்படையினா் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கரூா் பசுபதிபாளையம் கொளந்தாகவுண்டனூரைச் சோ்ந்த ராமசாமி மகனும், கரூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராஜிவ்காந்தி (27) மற்றும் அவரது நண்பா்களான சாய்பாபா நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் பிரசாந்த் (23), வடக்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் பிரசாந்த் (27) ஆகியோா் எனத் தெரியவந்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், வழக்குரைஞா் ஆறுமுகம் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.