சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் தேவை!
சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவா் கே. செல்வராணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்டச் செயலா் சிவகாமி வேலை அறிக்கையையும், பொருளாளா் தனலட்சுமி வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனா். மாநிலப் பொதுச் செயலா் அ. மலா்விழி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன்.ஜெயராம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
மாநாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோா்சிங் நியமனங்களை கைவிட்டு, அரசு துறையில் காலியிடங்களை நிரப்பிட வேண்டும், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான சத்துணவு ஊழியா்கள் பங்கேற்றனா்.