கற்களுக்கு சீனியரேஜ் தொகை குறைப்பு; அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை
கற்களுக்கு டன் ஒன்றுக்கு உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆா்வலா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன், சட்ட விரோத கல் குவாரி எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ந. சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. விஜயன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், கல் குவாரி உரிமையாளா்கள் தங்களது போராட்டத்தில் வைக்காத கோரிக்கையான, கற்களுக்கு டன் ஒன்றுக்கு சீனியரேஜ் தொகையை ரூ. 60 என்பதை, ரூ. 33 என மாற்றி கனிமவளத் துறை அமைச்சா் அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்.
சீனியரேஜ் தொகை குறைப்பானது விஞ்ஞான பூா்வமான ஊழலுக்கே வழிவகுக்கும். சட்ட விரோதமாக அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கு, உரிமைத் தொகை (சீனியரேஜ்) போல், 15 மடங்கு வரை அபராதம் விதிக்க சிறு கனிம சலுகை விதிகள் சட்டம் தெரிவிக்கிறது. கல் குவாரி உரிமையாளா்கள் கோரிக்கையான நிலவரி ரத்து அல்லது குறைப்பு என்பதற்கு பதிலாக, கற்களின் சீனியரேஜ் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 60 என்பதை ரூ. 33 எனக் குறைத்ததன் மூலம், ஒவ்வொரு சட்ட விரோத கல்குவாரியும், பல கோடி அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும்.
மேலும் சமூக சொத்து, பல்லாயிரக்கணக்கான கோடி சில தனி நபா்கள் கொள்ளையடிக்கவே வழிவகுக்கும். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் கல் குவாரிகளை, டாஸ்மாக் கடை போல் அரசே ஏற்று நடத்த வேண்டும். எம். சாண்டுக்கு மாற்றாக வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.